பல்லாவரம்: பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பள்ளம்தோண்டியபோது மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோக சம்பவம் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாசமநல்லூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (24). இவர், பல்லாவரம் பகுதியில் தங்கியிருந்து தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஒப்பந்த ஊழியராக ஈடுபட்டு வந்தார். நேற்று வழக்கம்போல் அனகாபுத்தூர் கணபதி நகர் பாரி தெருவில் சக ஊழியர்களுடன் பள்ளம் தோண்டும் பணியில் சாமிக்கண்ணு ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பூமிக்கு அடியில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் கடப்பாரை பட்டதாக கூறப்படுகிறது.
இதில், மின்சாரம் பாய்ந்து சாமிக்கண்ணு தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாமிக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘பூமிக்கு அடியில் உயரழுத்த மின்கம்பி செல்வது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், அனகாபுத்தூர் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படி இருக்கையில், பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்காததே உயிரிழப்புக்கு காரணம்.
சாமிக்கண்ணுவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர். கடந்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்தது சாமிக்கண்ணு பலியானது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.