பல்லாவரம்: பல்லாவரம் அருகே அனகாபுத்தூர், அடையாறு ஆற்றின் கரையோரம் சந்தேக நிலையில் ஒருவர் சுற்றி திரிவதாக நேற்று மாலை சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சாக்குப் பையுடன் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது, அதற்குள் சிறுசிறு பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, கோபிகிருஷ்ணா காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து சில்லறை விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.