*துர்க்கை என வழிபட்டு வந்தனர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தை சேர்ந்த முரளி அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் மேடான பகுதியில் பாதியளவுக்கு மேல் மண்ணுக்குள் புதைந்திருந்த சிற்பத்தை இப்பகுதி மக்கள் துர்க்கை என வழிபட்டு வந்தனர்.
மண்ணை அகற்றி வெளியே எடுத்தபோது சுமார் 3 அடி உயரமுள்ள இந்த சிற்பம் மூத்ததேவி என தெரியவந்தது. எளிய தலை அலங்காரம் மற்றும் ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் தவறாமல் இடம்பெறும் காக்கை கொடி இந்த சிற்பத்தில் இல்லை. வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் காட்டப்பட்டு இருப்பார்கள். ஆனால் இந்த சிற்பத்தில் அவளது இடுப்புக்கு கீழே காட்டப்பட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க வித்தியாசமான அமைப்பாகும்.
பல்லவர் கலை அம்சத்துடன் காணப்படும் இந்த சிற்பம் கி.பி.7-8ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மூத்ததேவி வழிபாடு தமிழ்நாட்டின் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடாகும். இத்தெய்வத்தை தவ்வை, மா முகடி, முகடி என திருக்குறள் குறிப்பிடுகிறது. வடமொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த தாய்த்தெய்வ வழிபாடு பல்லவர் காலத்தில் சிறப்புற்று இருந்தது.
வளமை, செல்வம், குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கான தெய்வமாக மூத்ததேவி விளங்கினாள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன. கோவடி அருகிலுள்ள மொளசூர் கிராமத்திலும் சிறியதும் பெரியதுமாக இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் பகுதியில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மூத்ததேவி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதற்கான வரலாற்று தடயம்தான் தற்போது கோவடியில் கண்டறியப்பட்டுள்ள சிற்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.