நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி-சிலுக்குவார்பட்டி இடையே உள்ள நெடுஞ்சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை அருகே மதுரையில் இருந்து பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக பெரியகுளம், தேனி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் மதுரை-பெரியகுளம் நெடுஞ்சாலையான எப்போதும் பரபரப்பான சாலையாக உள்ளது. பள்ளப்பட்டி பிரிவு முதல் சிலுக்குவார்பட்டி வரை உள்ள குறுகலான இச்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் செய்யபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பல இடங்களில் பெயர்ந்து பெரிய பெரிய பள்ளங்களாகவும், சாலையின் இருபுறமும் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழையினால் சாலையிலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.