திருப்பூர்: பல்லடம் கொலை வழக்கில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முன்ற குற்றவாளியை பெண் டிஎஸ்பி சுட்டு பிடித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பாஜ கிளை தலைவர் மோகன்குமார் (49). தவிடு, புண்ணாக்கு வியாபாரி. முன்விரோதம் காரணமாக இவரும், தம்பி செந்தில்குமார் (47), தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தில் கொலை செய்தது நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த குட்டி வெங்கடேஷ் (எ) ராஜ்குமார் (27), அவரது நண்பர்களான செல்லமுத்து (24), சோனை முத்தையா (எ) விசால் (22) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதில் கடந்த 4ம் தேதி செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த வெங்கடேசின் தந்தை அய்யப்பனும் (52) கைதானார். வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொலை நடந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் மறைத்து வைத்துள்ளதாக வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்கு வெங்கடேஷை அழைத்து சென்றனர். ஆயுதங்களை எடுத்துக்கொடுத்த பின்னர் வெங்கடேஷை வேனில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேஷ் சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறவே அனுமதித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரை தாக்கிவிட்டு புதர்களுக்குள் புகுந்து வெங்கடேஷ் தப்பி ஓடினார். போலீசார் பிடிக்க முயன்றபோது மீண்டும் தாக்கிவிட்டு ஓடியதால் வெங்கடேஷை போலீசார் விரட்டிச்சென்றனர். எச்சரிக்கையையும் மீறி ஓடியதால் டிஎஸ்பி சவுமியா முதலில் அவரது வலது காலில் சுட்டார். மீண்டும் நிற்காமல் வெங்கடேஷ் ஓடிச்சென்றதால், 2வது முறையாக அவரது இடது காலிலும் சுட்டார். குண்டு பாய்ந்ததில் வெங்கடேஷ் சுருண்டு விழுந்தார்.
உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வெங்கடேஷ் மீது 8 வழக்கு
சுட்டு பிடிக்கப்பட்ட வெங்கடேஷ் மீது நெல்லை மாவட்டம் முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி, போலீசார் மீது தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் என மேலும் 3 வழக்குகள் மற்றும் 4 பேரை கொலை செய்த வழக்கும் உள்ளது.