டெய்ர் அல் பலாஹ்: மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 146 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலுக்கும், காசாவில் செயல்படும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட போர் நீடிக்கிறது. இந்த போரில் ஹமாஸ் படையினருக்கு உதவி செய்யும் ஈரான் மீதும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உணவு பொருள்களை வாங்க காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஈவு, இரக்கமற்ற தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை.
இந்நிலையில் மத்திய காசாவின் டெய்ர் அல் பலாஹ் பகுதியில் நேற்று உதவி மையங்களில் உணவு உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் காத்து கொண்டிருந்தனர். அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் டிரோன் தாக்குதல்களில் 25 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 146 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.