ஜெருசலேம்: சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் குதிரையேற்ற வீராங்கனை ஒருவர் சிறுவர்களுக்கு பயிற்சியளித்து வருவது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பாலஸ்தீனத்தில் எப்போதும் குண்டு சத்தம் கேட்கும் மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மாயர் ஐஜே என்ற குதிரையேற்ற வீராங்கனை சிறுவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். எபிரோனுக்கு அருகில் உள்ள பழமைவாத சமூகத்தில் குறிப்பாக சிறுமிகளுக்கு குதிரையேற்ற பயிற்சி வழங்குவது சவால் மிகுந்த ஒன்று என மாயர் ஐ.ஜே தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் இருந்து குதிரைகளிடம் அன்புகாட்டி அவர் பிற்காலத்தில் தனது கனவுகளை மாற்றி கொண்டு குதிரையேற்ற வீராங்கனையாக சாதித்து வருகிறார். குதிரையேற்ற வீராங்கனை மாயர் ஐ.ஜே-க்கு அவரது குடும்பத்தினர் போதுமான உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர். குதிரை சவாரி பாரம்பரியமாக அவர்களின் சமூகத்தில் ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக கருதப்பட்டாலும் அதை மாற்றும் முன்னெடுப்பில் மாயரின் விடாமுயற்சி எபிரோனை சுற்றியுள்ள மற்றவர்களை தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு விளையாட்டில் தேர்ச்சி பெறுவதற்கு ஊக்கம் அளிக்கிறது.