Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

20 ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் என பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் பாலஸ்தீனிய மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

காசா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாகக் கடந்த 2006ல் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்பு எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தது.

போரால் காசாவில் ஏற்பட்டுள்ள கடும் உள்கட்டமைப்புச் சிதைவுகள் ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் மக்கள் வாக்களிக்க இஸ்ரேல் அனுமதிக்குமா என்ற சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பாலஸ்தீனத்தில் அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ தேதி சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. பாலஸ்தீனிய அரசு தனது சட்டபூர்வமான அங்கீகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த நாட்டில் 2006-க்கு பிறகு தேர்தல் நடைபெறும் என அரவிக்கப்படுவது இது முதல் முறை அல்ல; கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே போன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பின்னர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பதற்றமான சூழலில் இந்தத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.