பழநி: பழநி மலைக்கோயில் இணையதள சர்வர் 3 மணிநேரம் பழுதானது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு கட்டண தரிசன வழி உள்ளது. இங்கு டிக்கெட் பெற்று பக்தர்கள் சென்று வருகின்றனர். அதுபோல் தங்கரதம், தங்கத்தொட்டில் ஆகிய நேர்த்திக்கடன்கள் செலுத்தவும் மற்றும் வின்ச், ரோப்கார் ஆகியவற்றில் பயணம் செய்யவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இச்சேவைகளுக்கு இணையதளத்தின் சர்வர் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சர்வரில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தரிசனம், ரோப்கார் என அனைத்து சேவைகளுக்கான டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க நேர்ந்தது. அப்போது கோயில் ஊழியர்கள், பக்தர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறு வெள்ளை பேப்பர்களில் டிக்கெட்டுக்கான வாசகம் எழுதி கோயில் சீல் அடித்து டிக்கெட் போன்று வழங்கப்பட்டது. சுமார் 3 மணிநேரத்துக்கு பிறகு சர்வர் பிரச்னை சரி செய்யப்பட்டு அனைத்து சேவைகளும் துவங்கின.