சென்னை: பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது என்பது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும் என்றும், எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்களாக உள்ள கோயில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜ பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழநி கோயிலில் தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக இக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர்களை அனுமதிக்க தடை விதித்து போர்டு வைக்க வேண்டுமென கலகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோரிக்கையை ஏற்கும் வகையில் மதுரை உயர் நீதிமன்றம் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டுமென தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும். 1947ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோயில்கள் நுழைவு சட்ட விதியை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டத்தில் இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் யாரையும் தடுக்கக் கூடாது என்று தான் தெளிவுபடுத்துகிறது. இதர மதத்தினர் கோயிலுக்குள் வருவதற்கு இச்சட்டம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு இத்தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.