சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் பழனிசாமி. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்தத் திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலகளவில் பல்வேறு பதக்கங்களை ஆண்டுதோறும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால் துணை முதலமைச்சரின் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் உயர்தரத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளும்தான் காரணம். இன்றைக்கு உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் தமிழ்நாடே விளங்குகிறது. இச்சாதனைகளால்தான் இந்திய தொழில் கூட்டமைப்புச் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாமல் சீர்கெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி விளையாட்டு மேம்பாட்டுத் துறையைப் பற்றியெல்லாம் பேசலாமா? தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யுனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. பாஜவின் அடிமைகளிலேயே தான் தான் சிறந்த அடிமை எனக் காட்டுவதற்காகப் பழனிசாமி நடத்தும் இந்தக் கோமாளித் தனங்களைக் கேலிக் கூத்துகளாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மற்றுமொரு படுதோல்வியைப் பரிசாகத் தந்து பழனிசாமியின் பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காத்திருக்கிறார்கள்.