பழநி: தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை (ஆக. 24) மற்றும் நாளை மறுதினம் (ஆக. 25) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 இடங்களில் உணவு வழங்கப்பட உள்ளது. ரூ.12.84 கோடியில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 8 இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்றவை நடைபெறுகிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணி, அலங்கார பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாட்டில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாமென மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேற்று அறிவித்தார்.