திண்டுக்கல்: பழனியில் நேற்றிரவு பெய்த மழையால் தற்காலிக பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெருமாள்புதூர் பச்சைஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் பாலத்தை சரி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதையடுத்து பழனியடுத்துள்ள பெருமாள்புதூர், பெரியமாபட்டி, பச்சையாறு உள்ளிட்ட கிராமங்களில் பெய்த கனமழையால் பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பு பச்சையாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. கனமழை காரணமாக பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் முழுவதும் அடித்து செல்லப்பட்டது.
இதனால் பச்சையாறு கிராம பகுதியில், பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சுமார் 8 கி.மீ. மாற்றுப்பாதையில் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக பாதையை சீரமைத்து பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.