* நீதிபதிகள், வெளிநாட்டு அமைச்சர்கள், ஆதீனங்கள், பக்தர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்பு
பழநி: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் வெளிநாட்டு அமைச்சர்கள், நீதியரசர்கள், ஆதீனங்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று துவங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, காலை 8.39 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், 8.40 மணிக்கு திருக்கோயிலூர் பாலாஜி குழுவினர் மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் குழுவினரின் சிறப்பு தவில் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 100 அடி கொடிக்கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வேல் கோட்டத்தை துவக்கி வைத்தனர்.
காலை 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறை வணக்கத்துடன் மாநாடு துவங்கியது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் சந்தரமோகன் வரவேற்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்க உரையாற்றினார். பின்னர் குன்றக்குடி, தருமபுரம், திருவண்ணாமலை, மதுரை, மயிலம்பொம்மபுரம் ஆதீனங்களின் ஆசியுரை நடந்தது. தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மாநாட்டு விழா மலரை வெளியிட உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் பெற்று கொண்டார்.
பின்னர் நீதியரசர்கள் சுப்ரமணியன், புகழேந்தி, சிவஞானம் சிறப்புரையாற்றினர். அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் நன்றி கூறினார். மாநாட்டு திடலை பார்வையிட காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. அறுபடை முருகன் பெயர்களில் கல்லூரி வளாகத்தின் பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மலேசிய அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், சுகிசிவம் தலைமையில் சிறப்பு கருத்தரங்குகள் நடந்தன.
அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் வடிவங்களை கொண்ட தத்ரூப சிலைகள் உள்ள அரங்கங்கள், முருகனின் புகழ்பெற்ற திருத்தலங்களின் புகைப்படங்களை கொண்ட சிறப்பு புகைப்பட கண்காட்சி, புத்தக விற்பனை மையம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பக்தர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை நிறுத்த கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கல்லூரி வளாகத்தில் 6 இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டை பார்வையிட்டு சென்ற பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் பஞ்சாமிர்தம், முருகன் படம், விபூதி, குங்குமம், லட்டு அடங்கிய பிரசாத பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் மாநாட்டினை சுமார் 2 லட்சம் பக்தர்கள் பார்வையிட்டனர். இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டைஒட்டி 39 வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் தங்களது ஆய்வு கட்டுரைகளை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தனர்.
* முதல்வரின் முயற்சிக்கு இலங்கை ஆளுநர் வாழ்த்து
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறுகையில், ‘‘தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பக்தர்களுக்கு மட்டுமல்ல. இருக்கிற அனைத்து இந்து சமயத்தினருக்கு அடையாளமான இந்த மாநாடு இப்புனித பூமியில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள்’’ என்றார்.
* முதல்வரின் முயற்சிக்கு இலங்கை ஆளுநர் வாழ்த்து
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறுகையில், ‘‘தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முருக பக்தர்களுக்கு மட்டுமல்ல. இருக்கிற அனைத்து இந்து சமயத்தினருக்கு அடையாளமான இந்த மாநாடு இப்புனித பூமியில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள்’’ என்றார்.
* வேலனை காண வந்த வெளிநாட்டு பக்தர்கள்
மாநாட்டில் பங்கேற்க இந்தியா முழுவதுமிருந்து 774 பேர் முன்பதிவு செய்து பங்கேற்றுள்ளனர். இதுபோல் ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 268 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மாநாட்டு நிகழ்வுகளையும், கண்காட்சிகளையும் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்கள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு ஜப்பான் நாட்டு பாரம்பரிய குடை, முருகன் சிலை உள்ளிட்ட பரிசுகளை வழங்கி கவுரப்படுத்தினர்.
* தமிழ் மருத்துவத்துறையை அரசு உருவாக்க வேண்டும்: நீதிபதி கோரிக்கை
நீதியரசர் புகழேந்தி பேசுகையில், ‘‘தமிழ் வளர்த்த அகத்தியருக்கு தமிழை முதன்முதலில் அருளியதே முருகன்தானே. தமிழோடும், தமிழ் பண்பாடோடும், பழக்கவழக்கங்களோடும் முருக வழிபாடு இரண்டற கலந்திருப்பது சங்க இலக்கியங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. முருகனின் கரங்கள் 12 தான் உயிரெழுத்துக்கள்.
அவரின் ஆறுமுகங்கள் சேர்த்ததுதான் மெய்யெழுத்துக்கள் என்று உருவகப்படுத்தி உள்ளார். முருகனின் மாநாட்டை, முத்தமிழ் முருகன் மாநாடாக நடத்துவது மிக பொருத்தமாக உள்ளது. தமிழ் மருத்துவ முறைகள் ஓலைச்சுவடிகளிலும், நூல்களிலும் மறைந்து கிடக்கிறது. தமிழையே உயிர் மூச்சாக கொண்ட தமிழக அரசு தமிழ் மருத்துவத்திற்கென தனி பொது துறையை உருவாக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
* நீதிபதி கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘கேளாமல் கொடுப்பவர் மட்டுமல்ல நமது தமிழ்நாடு முதல்வர். கேட்டதையெல்லாம் தருபவர் நமது முதல்வர். நிச்சயமாக நீதியரசரின் கோரிக்கைகள் தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
* முருகனடியார்கள் பெயரில் இன்று 15 பேருக்கு விருது
இன்று நடக்கும் 2ம் நாள் மாநாடு நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைக்கிறார். கோவை கெளமார மடம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பின் தலைவர் செங்கண் குமரா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்களுக்கு நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழ கவிராயர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
* ‘பிரிக்க முடியாதது முருகனும், தமிழும்’
மாநாட்டில் நீதிபதி சுப்பிரமணியம் பேசுகையில், ‘‘முருகன் முத்தமிழ் மாநாடு பழநியில் நடைபெறுவது மிகவும் போற்றத்தக்க நிகழ்வு. முருகனையும், தமிழையும் பிரிக்க முடியாது. தொல்காப்பியம், சிலப்பதிகாரத்தில் முருகனை வழிபாடு செய்ததற்கான சான்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து தமிழ் நூல்களிலும் முருகன் வழிபாடு குறித்த செய்திகள் உள்ளன’’ என்றார்.