Tuesday, March 25, 2025
Home » பழனி முருகனின் அதிசயங்கள்

பழனி முருகனின் அதிசயங்கள்

by Porselvi

அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். பழனியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரிய நாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திரு ஆவினன் குடியில் மயில்மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக் கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம். பழனி முருகப் பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களைக் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம், மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது.

சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேகப் பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்து விடுகின்றனர். முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும். ‘சிரசு விபூதி’ சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும்.தினமும் இரவில் பழனி முருகப் பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுவர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக வழங்கப்படும். இந்தப் பிரசாதம் பிணி தீர்க்கும் அருமருந்து என்பது நம்பிக்கை.

இரவில் சந்தனக் காப்பிட்டபின், மறுநாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர். மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களைத் தண்டாயுதபாணி பூஜிப்பதாக ஐதீகம்.புகழ் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் நாட்டுச் சர்க்கரை, மலை வாழைப்பழம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கையான பொருட்களின் மூலமாக கூடவே கற்கண்டு, உலர்திராட்ச ஆகியவையும் சேர்த்து செய்யப்படுகிறது.

பழனி முருகன் சிலை நவபாஷாணங்களால் செய்யப்பட்டதாகும். அந்த ஒன்பது பாஷாணங்கள்;

* திருமுருகப் பாஷாணம்,
* கார்முகில் பாஷாணம்,
* இந்திர கோபம் பாஷாணம்,
* குங்குமம் பாஷாணம்,
* இலவண பாஷாணம்,
* பவளப் புற்று பாஷாணம்,
* கௌரி பாஷாணம்,
* இரத்த பாஷாணம்,
* அஞ்சன பாஷாணம் ஆகும்.

பழனிக் கோயில் பள்ளி யறையில் முருகப் பெருமானின் திருப்பாதங்கள் தொட்டில் போன்ற ஊஞ்சலில் இருத்தப்பெறும், குழந்தைகளைத் தூங்கப் பண்ணுவது போல் முருகனையும் தொட்டிலில் கிடத்துவதாக நம்பிக்கை. அதன் பின் ஓதுவார் தாலாட்டுப் பாட பள்ளியறை கதவுகள் மூடப்படும். முருகன் மூன்று முறை விஸ்வரூபம் எடுத்திருப்பதாகச் சொல்கிறது புராணம். இந்திராதி தேவர்களுக்கு தனது பெருமையை உணர்த்த காட்டியது முதல் முறை. சூரபன்மன் செய்த தவத்திற்குப் பயனாகவும், அவன் மீதுள்ள அன்பினாலும் அவனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டியது இரண்டாவதாகும். தன் சகோதரனும், தன்மீது எல்லையில்லா பக்தி கொண்டவனுமான வீரபாகு தேவருக்கு விஸ்வரூப தரிசனமளித்தது மூன்றாவது முறையாகும்.

கந்தனுக்கு மயிலை விஷ்ணு அன்பளிப்பாய்க் கொடுத்தார் எனக் கூறுகிறது. பாரதம் மயிலையும், சேவலையும் கருடனிடமிருந்து சிருஷ்டித்து மகாவிஷ்ணு முருகனுக்குக் கொடுத்தார் என்கிறது பிரமாண்ட புராணம். மயிலைப் பார்ப்பது சுபசகுனம். முருகனின் வாகனமான மயிலை நினைத்தாலே மரண பயம் தீரும் என்கிறார் அருணகிரியார்.ஆக, முருகனின் வாகனமான மயிலை நினைத்தாலே மரணபயம் நீங்கும் என்றால்… முருகனை நினைத்தால்! அவனின் திருபாதத்தில் சரணாகதி அடைந்தால்!

ஜெயசெல்வி

You may also like

Leave a Comment

4 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi