பழநி: பழநியில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு கோலாகலமாக இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. மாநாட்டு திடல், அரங்கங்கள் தயார் நிலையில் இருப்பதுடன் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக, திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விளங்குகிறது. பழநியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை 8.30 மணிக்கு துவங்குகிறது.
இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடக்க உள்ள இந்த மாநாட்டிற்காக, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட 12க்கும் மேற்பட்ட ஆதீனங்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைக்கிறார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி ரூ.12.84 கோடியில் உணவு, குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்ரபாணி, அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் பூங்கொடி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநாடு வளாகம், போக்குவரத்து பணிக்காக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் தலைமையில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* 1,300 ஆய்வு கட்டுரைகள்
மாநாட்டில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநாட்டில் 5 ஆய்வரங்கங்கள் நடக்க உள்ளன. 39 வெளிநாட்டினர் உள்பட 1,300 பேர் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க உள்ளனர். மாநாட்டில் விழா மலர், ஆய்வு கட்டுரை மலர் என 2 மலர்கள் வெளியிடப்பட உள்ளன.
* கண்ணை கவரும் வண்ண சிலைகள்
மாநாட்டின் பிரதானமாக 3டி அரங்கு விளங்குகிறது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 3டி முறையில் அறுபடை முருகனின் வரலாறு எடுத்துரைக்கப்பட உள்ளது. மலைக்கோயிலின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் 18 சித்தர்களின் சிலைகள், முருகன், சிவன், பார்வதி என பல்வேறு தெய்வங்களின் வண்ண சிலைகள் ஆங்காங்கே காண்போரின் கண்ணை கவரும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாடு நடக்குமிடத்தில் தூண்கள் கோயிலில் உள்ள கலைநய தூண்கள் போல் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
* 1 லட்சம் பிரசாத பைகள் தயார்
மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் ஆய்வறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் படம், சிறிய அளவிலான பஞ்சாமிர்தம், லட்டு, விபூதி, குங்குமம் உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக சுமார் ஒரு லட்சம் பிரசாத பைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
* ஒரு வாரம் வரை பார்வையிடலாம்
மாநாடு 2 நாட்கள் நடந்து முடிந்த பின், அரங்கம், கண்காட்சி, பொதுமக்கள் பார்வைக்காக ஒரு வாரம் வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.