பழநி: தொடர் மழை எதிரொலியாக பழநி பகுதியிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு தொடர் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்றைய நிலவரப்படி பழநி நகரில் பெய்த மழையின் அளவு 62 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. இதுபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பழநி பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதரமான அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 65 அடி உயரமுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 34.42 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 24 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 10 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுவதும் நிரம்பி விட்டது. அணைக்கு விநாடிக்கு 106 கனஅடி நீர் வருகிறது. வரும்நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 25 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது.
80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 62.45 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 77 கனஅடி நீர் வருகிறது. 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 19 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.