பழநி: பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணிமாறுதல் செய்ததை கண்டித்து ரயில்வே பெண் போலீஸ் அனுப்பிய ராஜினாமா கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீசில் கடந்த 7 ஆண்டுகளாக முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் ஒருவர், தற்போது திருச்சி ரயில்வே போலீசிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண் காவலர் திருச்சி ரயில்வே எஸ்பிக்கு அனுப்பியதாக தற்போது சமூக வலைத்தளங்களில் ராஜினாமா கடிதம் ஒன்று வைரலாகி உள்ளது.
அந்த கடிதத்தில், பழநி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளச்சாமி தன்னிடம் வரைமுறை தவறி பேசினார். அவரது ஆதரவில் பழநி ரயில்வே போலீசில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வரும் மணிகண்டனும் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து பேசியதால் பணிரீதியாக பல்வேறு வகையில் பழிவாங்கப்பட்டேன். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் தன்னை தண்டனை இடமாற்றமாக திருச்சிக்கு மாற்றப்பட்டேன்’ என தாகவும் தெரிவித்துள்ளார்.
10 பக்க புகார் கடிதத்தின் இறுதியில் இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கையால் தனக்கு மனஉளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணம் தோன்றுவதாகவும், இதனால் தனது பணியை ராஜினாமா செய்வதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘7 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்தை தடுப்பதற்காக இதுபோன்ற புகார்களை தெரிவித்திருக்கலாம். உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பர்’’ என்றனர்.