சென்னை: பழனி முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சமயம் சார்ந்த வகுப்புகளை தொடங்கவும், முருகனுடைய தமிழ் இலக்கிய புகழை அறிந்து கொள்ளும் வகையில், அது சம்பந்தமான போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ₹3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ₹81 லட்சத்தில் மரத்தேர் உட்பட ₹3.86 கோடி மதிப்பீட்டில் 29 பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திருக்கோயிலில் இதுவரை 90 சதவீத திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன, விரைவில் குடமுழுக்கு நடைபெறும்.
பழனி முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் சமயம் சார்ந்த வகுப்புகளை தொடங்கவும், முருகனுடைய இலக்கிய புகழை அறிந்து கொள்ளும் வகையில், அது சம்பந்தமான போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை நமீதா விவகாரம் அமைச்சர் கருத்து
நடிகை நமீதா மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றபோது நடந்த சம்பவம் குறித்து என் பெயரையும் சேர்த்து பேட்டி அளித்திருந்தார். ஏற்கனவே பழனி கோயில் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் நமீதா, இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நமீதாவின் மனது புண்படும்படியாகவோ அல்லது சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தாலோ அதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவிற்கு வருத்தப்படுவதாக இருந்தால் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம் என்று சேகர்பாபு கூறினார்.