சென்னை: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். வருகின்ற 24, 25ம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். தமிழ் கடவுள் என போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
இதற்காக பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் மாநாட்டு பந்தல், காட்சி அரங்கங்கள், உணவுக் கூடம் போன்றவற்றை அமைக்கும் பணிகளுக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
விழாவில் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சச்சிதானந்தம் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமை பொறியாளர் பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், கார்த்திக், மாரிமுத்து, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் மணிமாறன், சுப்பிரமணியன், ராஜசேகரன், சத்யா கலந்துகொண்டனர்.