மதுரை: மதுரை நாராயணபுரம் பகுதியில் வசிக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், கால்முறிவு ஏற்பட்டு ஓய்வில் உள்ளார். அவரது இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வருக்கு பல்வேறு வேலைப்பளு உள்ள சூழலில் நான் உடல் நலம் குன்றியுள்ளதை கேள்விப்பட்டு என்னை இல்லம் தேடி வந்து சந்தித்தார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2002ல் பொடா சட்டத்தில் நான் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது, வேறு ஒரு போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தோழர்களை கைது செய்து அதே சிறையில் கொண்டு வந்து அடைத்தனர். ஒரே பிளாக்கில் நாங்கள் இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி தந்தனர். கிட்டத்தட்ட 15 நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்பொழுது அவரிடம் பல உரையாடல்களை செய்திருக்கிறேன். மு.க.ஸ்டாலின் என் மீது அன்பும் மதிப்பும் காட்டி வந்தவர். இந்த சூழலில் அவர், சக அமைச்சர்களுடன் என்னை வந்து சந்தித்தது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. இது என்றும் மறக்க முடியாதது. முதல்வருக்கு என்னுடைய நன்றி’’ என்றார்.