பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே ஒதளூரில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே ஒதளூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலன் (70). இவரது மனைவி கமலாக்ஷி (65). இவர்கள் பென்ஷன் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் கிடைக்கும் சிறு வருவாயை வைத்து உணவு மற்றும் மருந்து மாத்திரை வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கமலாக்ஷிக்கு தீராத நோய் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். பாலன் மனைவியை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். பின்னர், கிணற்றில் எட்டு பார்த்த போது கமலாக்ஷி சடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாலன் திருத்தாலா போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து எஸ்.ஐ., சுபாஷின் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பட்டாம்பி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கமலாக்ஷியின் உடலை மீட்டு பட்டாம்பி தாலுகா அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்தாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.