பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகா வாணியங்குளம் ஊராட்சியில் பீல்ட் துணை அதிகாரியாக பணிப்புரிபவர் பாஷில் (40). இவரிடம் கோதக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர், தனது தந்தையின் பெயரிலுள்ள 62 சென்ட் நிலத்திற்கு நில உரிமை சான்றிதழ் வேண்டி கடந்த 9ம் தேதி விண்ணப்பித்துள்ளார். அப்போது பீல்ட் அதிகாரி பாஷில் அவரிடம் போக்குவரத்து செலவு உட்பட ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டுமென கேட்டதாக தெரிகிறது.
முன்னதாக 500 ரூபாய் பெற்றுக்கொண்டார். பின்னர் 500 ரூபாய் சான்றிதழ் தரும்போது தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு விண்ணப்பத்தாரர் தனது உறவினரை ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று உரிமை சான்றிதழ் வாங்கி வர அனுப்பி வைத்திருந்தார். அப்போது அவரிடமும் பாக்கி தொகை 500 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஜூன் 28ம் தேதி தருவதாக கூறி சான்றிழை வாங்கி சென்றதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து விண்ணப்பதாரர் பாலக்காடு விஜிலன்ஸ் டிஎஸ்பி புகார் அளித்துள்ளார். இதன்பேரில் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை அதிகாரியிடம் வழங்குமாறு விஜிலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி அவர், 500 ரூபாயை பாஷிலிடம் கொடுத்தபோது தனது மொபைல் போன் கவரில் வைக்குமாறு கூறியுள்ளார். அதிகாரி கூறியப்படி மொபைல் போன் கவரில் வைத்துள்ளார். இதனை எடுக்க முயன்றபோது அதிகாரி பாஷில் கையும் களவுமாக நேற்று பிடிப்பட்டார். இது தொடர்பாக பாஷில் மீது விஜிலன்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.