ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
வங்கதேசத்தின் இந்த வரலாற்று வெற்றியில் மெஹந்தி ஹசன் மெராஜ், லிட்டன் தாஸ், ஹசன் மஹ்மூத் மற்றும் நஹித் ராணா ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இரண்டாவது நாளில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற, ஒட்டுமொத்த அணியும் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பிறகு, முதல் இன்னிங்சில் மோசமான தொடக்கத்தை பெற்ற வங்கதேசம் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் லிட்டன் தாஸ் 138 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்தார். மெஹந்தி ஹசன் மெராஜ் 78 ரன்கள் எடுத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
இருவரும் பங்களாதேஷ் இன்னிங்ஸை காப்பாற்றினர். 26 ரன்களில் இருந்து 262 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினர். 2வது இனிங்சில் மீண்டும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பரிதாபமாக ஆட்டமிழந்தனர். அப்துல்லா ஷபிக், பாபர் அசாம், ஷான் மசூத், சவுத் ஷகீல் ஆகியோர் சிறப்பாக செயல்படாததால் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருக்க வங்கதேசம் இந்த சாதனையை வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், நான்காவது நாளில், ஜாகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் நல்ல தொடக்கத்தை பெற்றனர், ஆனால் மழை சேதம் விளைவித்ததால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது நாள் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது. வங்கதேசத்துக்கு இன்னும் 143 ரன்கள் தேவைப்பட்டது.
பங்களாதேஷ் அணியின் ஜாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், கேப்டன் நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சக்திவாய்ந்த பேட்டிங் செய்து போட்டியை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தனர்.இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.