மும்பை: பஹல்காம் தாக்குதலின் போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் நடிகை மவ்ரா ஹுசைனின் சமூக வலைதள கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பல பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக முடக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகைகள் மவ்ரா ஹுசைன், ஹனியா ஆமிர், மஹிரா கான், நடிகர் ஃபவாத் கான் போன்ற முக்கிய பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டன.
குறிப்பாக, நடிகை மவ்ரா ஹுசைனின் சமூக வலைதள கணக்கு, கடந்த இரண்டு மாதங்களாக இந்திய பயனாளர்களால் பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது மவ்ரா ஹுசைனின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை நீக்கப்பட்டு, இந்தியாவில் மீண்டும் பார்க்க முடிவதாக சில பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். மவ்ரா தனது சமீபத்திய இன்ஸ்டா ஸ்டோரியில், அவர் நடித்த ‘சனம் தேரி கசம்’ திரைப்படத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதனால் அவரது கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததை உறுதி செய்வதாகக் கருதப்படுகிறது.
இவர் 2016ல் வெளியான ‘சனம் தேரி கசம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, இந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர். இருப்பினும், ஃபவாத் கான், ஹனியா ஆமிர் போன்ற மற்ற பாகிஸ்தான் நடிகர்களின் கணக்குகள் இன்னும் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. எனவே, மவ்ராவின் கணக்கு நிரந்தரமாகத் தடை நீக்கம் செய்யப்பட்டதா? அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? என்பது குறித்து மெட்டா நிறுவனமோ, ஒன்றிய அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.