புனே: மகாராஷ்டிரா மாநிலம் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியதாவது: பாகிஸ்தான் மீதான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போர் விமானங்களை இழந்ததை ஒப்புக்கொண்டதற்காக எனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எங்கள் தரப்பில் இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, முடிவுகள் மற்றும் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம் என்பதால் இவை முக்கியமல்ல என்று நான் சொன்னேன். இழப்புகள் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பேசுவது மிகவும் சரியானதாக இருக்காது. போரில், பின்னடைவுகள் ஏற்பட்டாலும், உங்கள் மன உறுதியைப் பேண வேண்டும். இழப்புகள் முக்கியமல்ல, ஆனால் விளைவுகள் முக்கியம். பஹல்காமில் நடந்த சம்பவம் இந்தியா பயங்கரவாதத்தின் நிழலில் வாழப் போவதில்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான தனது எதிர் நடவடிக்கைகளை 48 மணி நேரம் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் அது சுமார் எட்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்து விட்டது. இந்திய நடவடிக்கை தொடர்ந்தால் அதிகம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்ததன் விளைவாக மே 10 அன்று இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் முடிவு செய்தது. பாகிஸ்தானிடமிருந்து பேச்சுவார்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான கோரிக்கை வந்தபோது, நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் எல்லையை வலிமையாக்கி உள்ளோம். பயங்கரவாதத்தை தண்ணீருடன் இணைத்துள்ளோம், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புதிய ராணுவ நடவடிக்கையை, புதிய சிவப்பு கோட்டை நாங்கள் வரைந்துள்ளோம்’ என்றார்.
* பாக்.கிற்கு இன்னிங்ஸ் தோல்வி
பாதுகாப்பு படை தலைவர் அனில் சவுகான் கூறுகையில்,’ இந்தியாவின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நான் ஒரு விரிவான பதிலை தருவேன். நீங்கள் ஒரு கால்பந்து போட்டிக்குச் சென்று 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அவர்கள் இரண்டு கோல்களை அடித்தார்கள், நீங்கள் நான்கு கோல்களை அடித்தீர்கள். எனவே அது ஒரு கணக்கீடு செய்யும் சமமான போட்டி. ஆனால் நீங்கள் ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்குச் சென்று இன்னிங்ஸ் தோல்வி அடையச்செய்து வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட்டுகள், எத்தனை பந்துகள் மற்றும் எத்தனை வீரர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த போரில் பாக். ஒரு இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது’ என்றார்.