சிங்கப்பூர்: பாகிஸ்தானுக்கு எதிரான போரில், போர் விமானங்களை இழந்தது உண்மைதான் என இந்தியா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகவலை முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன.
இதில், இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். ஆனால், போர் விமானங்களை இழந்தது குறித்து இந்திய ராணுவம் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், சிங்கப்பூரில் ப்ளூம்பர்க் டிவி சேனலுக்கு பேட்டி அளித்த முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும் எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்ற எண்ணிக்கையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் போர் விமானங்கள் குறித்த கேள்விக்கு அனில் சவுகான் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமில்லை, விமான இழப்புக்கான காரணங்களை கண்டறிவதுதான் மிகவும் முக்கியம். ஏன் அப்படி நடந்தது, என்ன தவறுகள் செய்தோம் என்பதை பார்க்க வேண்டும். இதில் எண்ணிக்கைகள் முக்கியமில்லை. நல்ல விஷயம் என்னவென்றால், நாங்கள் செய்த சில தவறுகளை புரிந்து கொண்டோம்.
அதை சரி செய்து, 2 நாட்களுக்குப் பிறகு அதை செயல்படுத்தி, நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து எங்கள் போர் விமானங்களை மீண்டும் பறக்க விட்டோம். இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறானது. அணு ஆயுதப் போரை தவிர்க்க அமெரிக்கா உதவியது என்ற அதிபர் டிரம்பின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு நெருக்கமாக கட்டத்தில் இருப்பதாக கூறுவது ஏற்க முடியாதது.
வழக்கமான போர் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், அணு ஆயுத பயன்பாட்டிற்கும் இடையில் நிறைய இடைவெளி இருப்பதாக நான் உணர்கிறேன். நிலைமையை கட்டுப்படுத்த பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து கதவுகளும் திறந்திருந்தன. அணு ஆயுதங்களை நாடாமல் நமது பிரச்னையை தீர்ப்பற்கு பல வழிகளும் இருந்தன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பிறகு கடந்த மே 11ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்த இந்திய விமானப் படை இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, ‘இழப்புகள் போரின் ஒரு பகுதி’ என்றும், ‘பணியின் நோக்கம் நிறைவேறியது. தாக்குதலுக்குப் பின் அனைத்து விமானப்படை விமானிகளும் பத்திரமாக திரும்பி வந்தனர்’ என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
* நாட்டுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும்
காங்கிரஸ் மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘போர் விமானங்கள் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். இதைப் பற்றி முப்படைகளின் தலைமை தளபதியே ஒப்புக் கொண்டுள்ளார். காந்தி குடும்பம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பல பெரும் தியாகங்களை செய்துள்ளது. ஆனால் எங்களை கேள்வி கேட்கிறார்கள். இது வினோதமானது. அதிர்ச்சி அளிக்கிறது. தலைமை தளபதி இப்போது கூறியதை பற்றி தான் ராகுல் காந்தி கேள்வி கேட்டார். அதற்காக அவருக்கு எதிராக பாஜ பல எதிர்மறை பிரசாரம் செய்தது’’ என்றார்.
* வாஜ்பாய் செய்ததை மோடி செய்வாரா?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘கார்கில் போர் முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு ஜூலை 29, 1999 அன்று வாஜ்பாய் அரசு, தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தந்தை கே. சுப்பிரமணியம் தலைமையில் கார்கில் மறுஆய்வு குழுவை அமைத்தது. 5 மாதங்களுக்குப் பிறகு அந்தக் குழு தனது விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது.
பின்னர், தேவையான திருத்தங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 23, 2000 அன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதே போல, முப்படைகளின் தலைமை தளபதி வெளியிட்ட கருத்தை கொண்டு மோடி அரசும் இப்போது இதேபோன்ற நடவடிக்கையை எடுக்குமா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
அமெரிக்காவுக்கு அடிபணியாத இந்திரா காந்தி: கமல்நாத் பாராட்டு
ஜபல்பூர்: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட பாஜ கட்சி திரங்கா யாத்திரைகளை நடத்தி வரும் நிலையில், ஆயுத படைகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் ஜெய்ஹிந்த் சபாக்கள் நடத்தப்படுகின்றன. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் ஜெய்ஹிந்த் சபா பேரணியில் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் பேசுகையில், ‘‘1971ம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு காரணமான போரை நான் கண்டேன். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் வலிமையை கண்டேன். அமெரிக்கா அப்போதும் பாகிஸ்தானை ஆதரித்தது. பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் இந்திரா காந்தி அசைந்து கொடுக்க மறுத்துவிட்டார்’’ என்றார்.
* சிவப்பு கோடுகள் வகுத்துள்ளோம்
இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறுகையில், ‘‘பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கொண்ட வான் வெளியில் நாங்கள் 300 கிமீ தூரம் வரை ஊடுருவிச் சென்று ஆழமான இடத்தில் துல்லியமான தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறோம்.
எனவே பாகிஸ்தான் வான் அமைப்புகள் எதுவும் வேலை செய்யவில்லை’’ என்றார். மேலும் போர் நிறுத்தம் குறித்து அவர் கூறுகையில், ‘‘போர் நிறுத்தம் தொடர்கிறது. இது, எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்து தீர்மானிக்கப்படும். நாங்கள் தெளிவான சிவப்பு கோடுகளை வகுத்துள்ளோம்’’ என்றார்.