கராச்சி: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் படுதோல்வி அவமானத்தை கொடுத்திருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதும், வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாகிஸ்தானின் கிரிக்கெட் தரம் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியை இழந்த போதும், 2வது டெஸ்ட் போட்டியை வென்று பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் மோசமாக விளையாடி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்திருப்பதால் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சொந்த மண்ணில் நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 தோல்வி, 4 டிரா என்று ஹோம் சீசனை மோசமாக முடித்துள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும். நாம் பயணிக்கும் பாதை மாறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஒரு முன்னாள் வீரராக, கிரிக்கெட் ரசிகராக எனக்கு இது அவமானமாக இருக்கிறது. ஏனென்றால் நல்ல நிலையில் இருந்து தோல்வியை சந்தித்துள்ளோம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சொந்த மண்ணில் நடந்த போட்டிகளை தொடர்ச்சியாக இழந்திருக்கிறோம். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தரம் படு மோசமாக உள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் போதுமான திறமையான வீரர்கள் இல்லை என்று கருதுகிறேன். எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் கூட, அவர்களுக்கான பேக் அப் கூட நம்மிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அடுத்ததாக அக்டோபரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் நடப்பதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிரமாக தயாராக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையாவது சொந்த மண்ணில் போட்டிகளை பாகிஸ்தான் அணி வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் பாகிஸ்தான் அணி இம்முறை பதிலடி கொடுக்குமா, என்று விவாதங்கள் தொடங்கியுள்ளன.