கராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவருக்கு பரிசாக, ஹேர் டிரையர் வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதைப் போன்று, பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட் போட்டி தொடர்கள் 2016ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன.
கடந்த 12ம் தேதி, கராச்சியில் நடந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியும், முல்தான் சுல்தான் அணியும் மோதின.
முதலில் ஆடிய முல்தான் சுல்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது. பின்னர் ஆடிய கராச்சி கிங்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சதமடித்து தனது அணிக்கு வெற்றி தேடித்தந்த அவருக்கு, பரிசாக, ஹேர் டிரையர் வழங்கப்பட்டது. அந்த பரிசை அவர் சிரித்துக் கொண்டே வாங்கும் வீடியோவை, கராச்சி கிங்ஸ் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.
அதை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலும் கேலியுமாக கலாய்த்து அந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர். ஒரு நெட்டிசன், ‘அடுத்த முறை, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு, ரொட்டி மேக்கர் பரிசளியுங்கள்’ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ‘லஞ்ச் பாக்ஸ் கொடுத்தால் சரியாக இருக்கும்’ என கிண்டலடித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், ‘ஏன் இப்படி மானத்தை வாங்குகிறீர்கள்? பிஎஸ்எல்லை பிரபலப்படுத்துகிறீர்களா, அல்லது அவமானப்படுத்துகிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.