இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ யின் மாஜி தலைவர் பைஸ் ஹமீது. 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அரசில் மிகவும் சக்திவாய்ந்தவராக அவர் விளங்கினார். இந்த நிலையில் வீட்டு வசதி திட்ட ஊழல் தொடர்பாக 2023 நவம்பர் 8ம் தேதி மொயீஸ் அகமதுகான் என்பவர் பைஸ் ஹமீது மீது உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 2017 மே 12 அன்று பைஸ் ஹமீது உத்தரவின் பேரில் ஐஎஸ்ஐ அதிகாரிகள் எனது வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், பணம் உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களை கைப்பற்றினர். மேலும் பைஸ் ஹமீதுவின் சகோதரர் சர்தார் நஜாப் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினார். ஐஎஸ்ஐ அதிகாரிகள் என்னிடம் இருந்து ரூ.4 கோடி பறித்தனர்’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி பைஸ் இசா, நீதிபதி அத்தர் மினுல்லா, நீதிபதி அமினுதீன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, குற்றச்சாட்டை விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்ப முடிவு செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய மேஜர் ஜெனரல் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்ததாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில் பைஸ் ஹமீது மீது பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.