ஜம்மு: “பாகிஸ்தானை நம்ப முடியாததால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது” என எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஷாங்க் ஆனந்த் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்தார்.
அப்போது, “பாகிஸ்தானை நம்ப முடியாது. எதிரிகள் ஏதேனும் எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு அல்லது ஊடுருவலை நடத்தலாம் என தகவல்கள் கிடைத்தன. அதனால் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப்படையினர் முழுமையான தயார் நிலையிலும், விழிப்புடனும் இருக்கின்றனர். சர்வதேச எல்லையில் அதிக விழிப்புணர்வை பராமரிக்க வலுவான கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.