ஈரான்: கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய ஈரானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் உள்ள யாஸ்ட் மாகாணத்தில் உள்ள டாஃப்ட் நகரின் புறநகரில் பிற்பகுதியில் விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த போது, பேருந்தில் மொத்தம் 51 பேர் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் வசிப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பேருந்தின் பிரேக் செயலிழந்ததாலும், ஓட்டுநரின் அலட்சியத்தாலும் விபத்து ஏற்பட்டதாக ஈரானின் அரசு தெரிவித்துள்ளது.