லாகூர்: பாகிஸ்தான் தற்போது முழுமையான சர்வாதிகாரத்தை பார்ப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசீப், நாட்டில் கலப்பின மாடல் ஆட்சி நடப்பதாக கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர்கள் பலர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்)தலைமையிலான அரசு பொம்மை ஆட்சி நடத்துவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பாதுகாப்பு துறை அமைச்சரின் கருத்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில், ‘‘பாகிஸ்தானில் உள்ளது முழுமையான சர்வாதிகாரமாகும். பாகிஸ்தான் ராணுவ சட்டத்துக்கான தெளிவான உதாரணம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அல்லது அதிபர் ஆசிம் அலி சர்தாரிக்கு பதிலாக ஜெனரல் ஆசீம் முனீரை சந்திக்க தேர்ந்தெடுத்தது தான். ஏனெனில் முழு அதிகாரமும் முனீரிடம் உள்ளது என்பதை அவர் அறிந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.