லக்னோ: பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டு அடங்கிய நிலையில், அந்நாட்டு உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஜோதி மட்டுமல்லாமல் பஞ்சாபின் மலேர்கோட்லாவை சேர்ந்த கணவரை இழந்த குசாலா, இவரது தோழி பானு நஸ்ரீனா, யாமீன் முகமது, தேவிந்தர் சிங் மற்றும் அர்மான் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 5 நாள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) அமைப்பிற்காக உளவு பார்த்ததாக கூறப்படும் ஒருவரை உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்பு குழுவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷாஜத் என்பவர் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் மொராதாபாத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷாஜத் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பலமுறை பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.