இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி உள்ளது. அதன் மீது அவ்வழியாக நேற்று ஒரு வாகனம் சென்றது. திடீரென, சோதனைச்சாவடி மீது அந்த வாகனம் மோதியது. இதனையடுத்து காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிக்க செய்தனர்.
இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இதனிடையே மலைப்பகுதியான கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் தற்கொலை படை தாக்குதலுக்கு முன்னதாக ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் ஹபீஸ் குல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.