டாக்கா: வங்கதேசத்தில் மின் சப்ளை சேவை அளித்து வரும் அதானி நிறுவனம், 7,000 கோடி ரூபாய் நிலுவை இருந்ததால், அந்நாட்டுக்கு அளித்து வந்த மின் சப்ளையை பாதியாக குறைத்துள்ளது. அதானி குழுமத்தின் அதானி பவர் ஜார்க்கண்ட் லிமிடெட் (ஏபிஜேஎல்) நிறுவனம், அண்டை நாடான வங்கதேசத்தில் மின்சாரம் சப்ளை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்கம் கண்டுள்ள வங்கதேசம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால், வங்கதேச அரசு அதானி நிறுவனத்துக்கு, 7,000 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளது. இது தொடர்பாக, கடந்த, அக். 30ல், அந்நாட்டு அரசுக்கு அதானி நிறுவனம் கடிதம் எழுதி இருந்தது. இருப்பினும், வங்கதேச அரசால் கட்டண பாக்கியை குறித்த நேரத்தில் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, வங்கதேசத்துக்கு அளித்து வந்த மின் சப்ளையை, அதானி நிறுவனம் அதிரடியாக பாதியாக குறைத்து விட்டது. இந்த தகவல், வங்கதேச பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.