புதுடெல்லி: அரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவை , பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் அரியானா போலீசார் கைது செய்தனர். அவரிடம் அரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவரின் உதவியுடன்,அவர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு விஐபி போல் நடத்தப்பட்டார் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதி மல்ஹோத்ரா இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை பாகிஸ்தான் உட்பட நான்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். டேனிஷை சந்தித்த 17 நாட்களுக்குப் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ராவின் பேஸ்புக் பக்கத்தில் அவருடைய பயண விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி கடந்த ஜனவரியில் துபாய்,காத்மாண்டு மற்றும் காஷ்மீர் சென்றுள்ளார். பிப்ரவரியில் கேரளா, மார்ச்சில் பாகிஸ்தான், மே மாதத்தில் இந்தோனேசியாவுக்கு 2 வார பயணம் சென்றுள்ளார். மேலும் கடந்த 2023 பிப்ரவரியில் மட்டும் 2 முறை காஷ்மீருக்கு சென்றுள்ளார்.அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் லேவில் உள்ள பாங்காங் ஏரிக்கு பயணம் மேற்கொண்டார். டிசம்பர் 2024 ல் நேபாளத்திற்கு பயணம் மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 ல் வங்கதேசம் என அவரது பயணங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து 2024 மார்ச் 30 அன்று பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து சீனாவிற்கும் (ஜூன் 2024) விஜயம் செய்தார். மேலும் 2024 ஆகஸ்டில், காஷ்மீர், வங்கதேசம், பூடானுக்கும், செப்டம்பர் மாதத்தில் நேபாளத்திற்கும் சென்றுள்ளார். இறுதியாக 2024 நவம்பரில் சீனாவில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.