இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அசிஜா வழக்கில் விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவருக்கு 3 ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் மாஜி பிரதமரும், முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவருமான நவாஸ் ஷெரீப் (73), லண்டனில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து அக்டோபர் 21 அன்று பாகிஸ்தான் திரும்பினார். ஜனவரி 2024 இறுதிக்குள் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாகவே அவர் திரும்பியிருக்கிறார். தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அவர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
மேலும் 2018ம் ஆண்டு அல் அசிஜா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தண்டனையும் பஞ்சாப் மாகாண அரசு நிறுத்தி வைத்து நேற்று உத்தரவிட்டது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் ஆஜரான தருணத்தில் இந்த முடிவை பஞ்சாப் மாகாண அரசு எடுத்து அறிவித்தது. இதையடுத்து அல் அசிஜா ஊழல் வழக்கில் அக்.26ம் தேதி வரை ஷெரீப்புக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே போல் அவன்பீல்டு ஊழல் வழக்கிலும் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. நவாஸ் ஷெரீப்புடன், அவரது தம்பியும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.