வாஷிங்டன்: பாகிஸ்தான் ஊடங்கங்களை கட்டுப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை குற்றம் சாட்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் கடன் உதவி அளித்து அவற்றை தனது பகடை காய்களாக சீனா பயன்படுத்தி வருகிறது. வெளிநாட்டு செய்திகளை கையாளுவதற்காக சீனா ஆண்டுதோறும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை செலவிடுகிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஊடக அமைப்பின் மூலம் பாகிஸ்தான் ஊடகங்களை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
அதன்படி, சீனா-பாகிஸ்தான் ஊடக அமைப்பின் செயல்பாடு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, முக்கிய செய்திகளை உருது மொழியில் மொழிபெயர்ப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும். சீன தூதரக செய்திகளை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு நேரடியாக வழங்குதல், சீனா குறித்த பொது விமர்சனங்களை கண்காணித்து பதிலளித்தல் ஆகிய பணிகளை முன்மொழியப்பட்ட இந்த கண்காணிப்பு மையம் மேற்கொள்ள உள்ளது,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.