ஆரணி: ஆரணியில் விபத்துக்களை தடுக்க சென்டர்மீடியனுக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஆரணி நெடுஞ்சாலை துறை உட்கோட்ட பிரதான சாலையான ஆரணி டவுன், ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் தினசரி போக்குவரத்து அதிகரித்து வருகிறது. விபத்து தடுக்க சாலையின் நடுவே சென்டர்மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் விளம்பர போஸ்டர்கள், நோட்டீசுகள் உள்ளிட்டவை அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இரவில் ரிப்ளக்டர்கள் தெரியாததால் சென்டர்மீடியன் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.
எனவே சென்டர்மீனியனில் ஒட்டப்பட்ட நோட்டீசுகளை அகற்றி சுத்தம் செய்து கருப்பு, வெள்ளை நிற பெயிண்ட் பூசவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் நாராயணன் உத்தரவின்பேரில் ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆரணி டவுன் காந்திசாலை, எஸ்எம் ரோடு, அண்ணாசிலை பகுதி, இரும்பேடு சாலை, சேத்துப்பட்டு சாலைகளில் உள்ள சென்டர்மீடியன்களில் கருப்பு, வெள்ளை அடிக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.