சென்னை: சென்னையில், 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டத்தினை செயல்படுத்தி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களிடம் இருந்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 100 ஓவிய, சிற்ப கலைஞர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்டர் கலர், கேன்வாஸ், ஆயில் கலர், அக்ரலிக், மிக்ஷர் மீடியா, பென்சில், பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தை நேற்று, சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு செயலாளர் சந்தரமோகன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமு, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.