சென்னை: கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்காக பெயின்டர் பயிற்சி அளித்து, பயிற்சி பெற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக கிரெடாயுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமாரும், கிரெடாய் சென்னை தலைவர் எஸ்.சிவகுருநாதனும் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு பெயின்டர்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 300 பெண்களுக்கு பெயின்டர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு பணி வழங்குவதற்காக கிரெடாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில் சென்னையில் நடைபெறும் கிரெடாய் உறுப்பினர்களின் கட்டுமானப் பணிகளில் பயிற்சி பெற்ற பெண் பெயின்டர்களுக்கு வேலை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.