சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில் பாமக தலைவர் அன்புமணி நேற்று 2வது நாளாக மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, புதிய கிளைகளை உருவாக்குவதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அன்புமணி ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ராமதாஸ் எங்கள் குலதெய்வம், குலச்சாமி. பாமகவை மேலும் வலுப்படுத்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பழைய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர் அட்டையை உங்கள் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுங்கள். ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம். 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்த கட்சியில் இருக்கிறது. உறுப்பினர்கள் 1.5 லட்சம். ஆனால் வாக்களித்தது 65 ஆயிரம் பேர்தான். சிறப்பாக பணியாற்றுபவர்களை மாற்றக் கூடாது.
கட்சியினரின் மனவேதனை எனக்கு புரிகிறது. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு எனக்கும் மன வேதனை இருக்கிறது. கட்சியினர் எனக்கு அடிபணிந்தவர்கள் என நினைக்க மாட்டேன். கட்சியில் எல்லாரும் சேர்ந்து பணியாற்றுங்கள். இவங்க ஆள், அவங்க ஆள் என இல்லாமல் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். பாமக யாருடைய சொத்தும் இல்லை, தொண்டர்களின் கட்சி தான். மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அத்தனை பேர் வந்திருந்தீர்கள்.
நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த செலவில், சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். வந்தது முதல், நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்தது வரை அத்தனை கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள். இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 3ல் ஒரு பங்கு பேர் திடலுக்கு வர முடியவில்லை. இதை பார்த்த ஆளும் கட்சி அதிர்ந்து போய்விட்டது. அதனால்தான் நம் கட்சியில் நடக்கும் சில விஷயங்களை பெரிதுபடுத்தி வருகிறது. அதைபற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்.
உங்களை யாரும் நீக்க முடியாது. கட்சிக்குள்ளேயும் சரி, கட்சியின் வெளியேயும் முடியாது. பொறுப்பு மாற்றங்கள் குறித்து வரும் தகவல்களை பெரிதாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். பொதுக்குழுவால் தேர்வான தலைவர் நான், நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். கட்சியில் உள்ள சின்ன சின்ன குழப்பங்களை சரி செய்வோம். தூசியை தட்டுவதை போல் விமர்சனங்களை தட்டிவிடுங்கள்.
தமிழக மக்களின் உரிமை மீட்புக்காக ஒரு நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். நான்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை, கட்சியின் வேலைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவர்கள் அவர்கள் என்று இல்லை, அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பா.ம.க. ஆட்சியமைக்க வேண்டும் என்ற காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம். கட்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். விரைவில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்யப் போகிறேன்.
அதை நீங்கள் டவுன்லோடு செய்தால் அனைத்து விதமான பிரச்னைகள் குறித்து பதிவு செய்யலாம். கிளை, வட்டம், மாவட்ட அளவில் என அனைத்தும் எனக்கு வந்து சேர்ந்துவிடும். அவற்றை கண்காணிக்க போகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பேன். உங்கள் அண்ணனாக, தம்பியாக நான் உள்ளேன், தைரியமாக வேலை பாருங்கள். தற்போது கட்சியில் சுதந்திரமாக செயல்பட முடிகிறது, எனது சொந்தங்கள் நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்கள். அது போதும். என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.
* காடுவெட்டி குரு பற்றி அன்புமணி திடீர் பேச்சு
அன்புமணி பேசும் போது கண்கலங்கினார். ராமதாஸ் அண்மையில் பரபரப்பு பேட்டியளித்த போது, வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவை அன்புமணி மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தற்போது காடுவெட்டி குருவின் கனவை நிறைவேற்றுவோம் என்று அன்புமணி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.