ஐநா: கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலாபயணி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த த ரெசிஸ்ட்டன்ஸ் பிரன்ட்(டிஆர்எப்) என்ற அமைப்பு பொறுப்பேற்றது.இது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகும். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை கடந்த 7ம் தேதி இந்திய ராணுவம் மேற்கொண்டது.
இதில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில் உள்ள 9 தீவிரவாத மையங்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக பாகிஸ்தான் டிரோன்கள் உள்ளிட்டவைகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் உதவியுடன் அவற்றை வானில் இடைமறித்து அழித்தது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. 4 நாள்களுக்கு பின்னர் இது முடிவுக்கு வந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ஒத்துழைப்பு குறித்து விரிவான விவாதம் நடத்துவதற்காக இந்திய குழு நேற்று முன்தினம் ஐநா தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளை சந்தித்தது. ஐநா தீவிரவாத எதிர்ப்பு இயக்குனரகத்தின் துணை பொது செயலாளர் விளாடிமிர் வொரான்கோ, உதவி பொது செயலாளர் நட்டாலியா கெர்மன் ஆகியோரை இந்திய குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு விளாடிமிர் வொரான்கோ, நட்டாலியா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் தாக்குதலை நடத்திய டிஆர்எப் அமைப்பை ஐநாவின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர் என வட்டாரங்கள் தெரிவித்தன. ஐநாவால் சர்வதேச தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான டிஆர்எப் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்களை தடை செய்வது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் 1267வது கமிட்டி எனப்படும் கண்காணி்ப்பு குழுவையும் இந்திய குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது பஹல்காம் தாக்குதலை டிஆர்எப் நடத்தியதற்கான ஆதாரங்களை கண்காணிப்பு குழுவிடம் அதிகாரிகள் அளித்தனர். டிஆர்எப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அழுத்தம் கொடுப்பதற்காக ஐநா உறுப்பு நாடுகளின் தூதர்களையும் இந்திய தூதுக்குழு சந்தித்து பேசியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
* அணுசக்தி நிலையத்தில் கசிவா?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணு சக்தி நிலையங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,பாகிஸ்தானில் உள்ள எந்த ஒரு அணு சக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சோ அல்லது கசிவு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
* சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: மறுபரிசீலனை செய்ய பாக்.கெஞ்சல்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து கடந்த 1960ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.இதனால் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அணை நீர் இந்தியாவால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக பாகிஸ்தானில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையது அலி முர்தசா,ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான நீரைப் பெறுகின்றனர். இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவது சட்டவிரோதமானது, இது பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.