ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பூஞ்ச் பகுதி வழியாக ஊடுருவி 2023ம் ஆண்டு முதல் இரண்டு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக நாட்டுக்குள் ஊடுருவினார்கள் என்ற முக்கிய தகவலை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். பூஞ்ச் பகுதி வழியாக தீவிரவாதிகள் 2022ம் ஆண்டு இறுதி அல்லது 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஊடுருவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஜம்மு பகுதியில் இயங்கி வந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு காஷ்மீருக்கு சென்றது தெரிய வந்தது. 2021ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இந்த தீவிரவாதிகள் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல 2024ம் ஆண்டு மே மாதத்தில் சனாய் பகுதியில் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. 2024 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அவர்கள் காஷ்மீருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். வட்கம் பகுதிக்கு வந்ததும் இரு பிரிவுகளாக பிரிந்து குல்மார்க் மற்றும் சோன்மார்க் பகுதிக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் சிறு, சிறு தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்காக மீண்டும் ஒன்றிணைந்த தகவல் வெளியாகியுள்ளது.