கட்டாக்: கடந்த 2023ம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்த விருது பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம், கல்விக்கான பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56வது இடத்தில் இடம் பெற்றது. அவர், டெல்லிக்கு சென்று ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர், ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன். இதற்காக 2023ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்த விருது தவறுதலாக பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்றவர் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவருக்கு இலக்கிய பங்களிப்புகள் எதுவும் இல்லை. எனது பெயரில் உள்ளவர் ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றார்’’ என கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, ‘அரசின் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது. விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த, தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார். மேலும், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.