டெல்லி: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள், மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகின்றது.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.