நன்றி குங்குமம் தோழி
விருதுக்கு வயது தடையில்லை என நிரூபித்து இருக்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 96 வயது பொம்மலாட்டக் கலைஞர்.பத்ம விருதுகள், கலை, பொது சேவை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் மற்றும் பல துறைகளில் சிறப்பு பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
இதில் 7 பத்மவிபூஷன், 19 பத்மபூஷன் மற்றும் 113 பத்ம விருதுகள் அடங்கும்.2025 ஆம் ஆண்டின் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 139 நபர்களில், பத்ம விருதைப் பெற்றவர்களில் ஒருவராக இருந்தவர் 96 வயது பொம்மலாட்டக் கலைஞர் பீமவா டொடடபாலப்பா ஷில்லேக்யாதரா (Bhimavva Doddabalappa Shillekyathara). பொம்மலாட்டக் கலையில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவரான இவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம விருதை முதுமையில் தள்ளாடியபடி நடந்து வந்து பெற்ற காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
70 ஆண்டுகளுக்கு மேலாக தன் வாழ்நாள் முழுவதையும் பொம்மலாட்டக் கலைக்காக முழுமையாக அர்ப்பணித்த கலைத்தாயாக விருது பெற அவர் டெல்லி ராஷ்ட்ரபதி பவனுக்குள் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்ட போது, ஜனாதிபதி திரௌபதி முர்மு மேடையை விட்டு கீழே இறங்கி வந்து, அந்த முதிய கலைத்தாயின் கரங்களைப் பற்றி, தொட்டு வணங்கி, பத்மஸ்ரீ விருதை வழங்கி அவரை கௌரவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மோரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த, இடம்பெயரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் பீமவா ஷில்லேக்யாதரா. கர்நாடகாவின் பாரம்
பரிய தோல் நிழல் பொம்மலாட்டமான ‘தொகளு கோம்பேயாட்டா’(Togalu Gombeyaata) என்கிற பாரம்பரியக் கலை வடிவத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும், இக்கலை வடிவை இறுகப்பற்றிக் கொண்டுசேர்க்க தன் வாழ்நாள் முழுவதையும் 7 தசாப்தங்களாக அர்ப்பணித்திருக்கிறார் இந்த முதிய பெண்மணி.
‘தொகளு கோம்பேயாட்டா’ வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… இசை மற்றும் நுணுக்கமான கைவினைப் பணிகளை ஒருங்கிணைக்கும் முழுமையான கதையெழுத்துக் கலை. இந்தக் கலையின் பாரம்பரியம் பெரும்பாலும் வாய்மொழியாகவே பரிமாறப்படுவதுடன், அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கலைஞர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில்தான், உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் சூராவளியாய் சுழன்று, தனது நிழல் பொம்மைகளை கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மாறிமாறிக் கொண்டு சென்று, மக்களின் கற்பனைக்குத் தீனியிட்டு, நாட்டுப்புறக் கதைகளை உயிர்ப்போடு மக்களிடம் சேர்த்த பொம்மலாட்டக் கலைஞராக பீமவா ஷில்லேக்யாதரா மிளிர்கிறார்.
நூற்றாண்டுகளாக வாழ்ந்த கதைகளை உயிர்ப்புடன் நகர்த்தி, தோல் பொம்மைகளை தனது கரங்களில் நுட்பமாக இயக்கி, கலைத் துறைக்கு பீமவா ஷில்லேக்யாதரா வழங்கிய பங்களிப்பிற்காக, இவரின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டி, இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது ஜனாதிபதியின் கரங்களால் நேரடியாக வழங்கப்பட்டது.
தொகுப்பு:மகேஸ்வரி நாகராஜன்