“ஸாங்க்யோகௌ ப்ருதகபாலா ப்ரவதந்தி ந பண்டிதா
ஏகமப்யாஸ்தித ஸ்ம்யகுபயோர்விந்ததே பலம்’’ (5:4)
‘‘ஸாங்க்யம், அதாவது நிஷ்காம கர்மயோகம் மற்றும் கர்ம சந்நியாசம் இரண்டும் ஒன்றே என்பது கற்றறிந்தவர்களின் கருத்து. ஆனால், இரண்டும் வெவ்வேறு பலன்களை அளிக்கக்கூடியவை என்பர் அஞ்ஞானிகள்.’’ கர்ம சந்நியாசமானாலும், நிஷ்காம கர்மமானாலும், இரண்டிற்கும் பலன் ஒன்றே என்பது பண்டிதர்களின் உறுதிப்பாடாகும். அதாவது பயணத்தின் இலக்கு, உரிய இடத்துக்குப் போய்ச் சேருவது தான். அந்த இலக்கை அடையும் பயணப் பாதை எத்தகையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதை மட்டுமல்ல, அந்தப் பாதையில் நம்மை ஏற்றிச் செல்லும் வாகனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பாதை சரியில்லை, அந்தப் பாதை சரியில்லை என்று வாதமிடுவதும், பாதை பற்றிய குறைகளைத் தெரிவிப்பதும், அஞ்ஞானிகளின் சுபாவம்.
இவர்களுக்கு இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் கிடையாது அல்லது எப்படியாவது அடைந்துவிட முடியாதா என்ற அகம்பாவ அலட்சியம். அதே சமயம் அவ்வாறு அடைய முயற்சிப்பவர்களைப் பரிகசிப்பதும், பொல்லாங்கு சொல்லித் தவிர்ப்பதும் இவர்களுடைய சுபாவமாக இருக்கிறது. பயணப்பாதை எப்படிப் பலவாறாக இருக்கின்றனவோ அதேபோல பயணம் செய்யும் வாகனங்களும் பலவகையாக அமைகின்றன.
விதவிதமான பாதைகள், விதவிதமான வாகனங்கள், விதவிதமான விமரிசனங்கள், விதவிதமான வழிகாட்டுதல்கள் எல்லாவற்றையும் மீறி ஞானியால் இலக்கை அடைந்துவிட முடியும். ஆனால் அஞ்ஞானியோ அந்த பாதைகளில் எதைப் பின்பற்றுவது என்றும், எந்த வாகனத்தில் பயணித்தால் விரைவில் இலக்கை அடைய முடியும் என்றும், விமரிசனங்களால் பாதிக்கப்பட்டு, தன் முயற்சியில் தொய்வு காண்பதும், மாறுபட்ட வழிகாட்டுதல்களால் தடுமாறித் திகைப்பதுமாக இருக்கிறான்.
இதுதான் இலக்கு என்று நிர்ணயித்துக் கொண்ட பிறகு எந்தப் பாதையும் அதை அடைய உதவுவதுதான் என்றும், எந்த வாகனமும் அங்கு கொண்டு சேர்ப்பிக்கும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளும் ஒரு ஞானி, எந்த விமரிசனத்தாலும், எந்த வழிகாட்டுதலாலும் தன் உறுதி குலைந்துவிடாது என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பான் அல்லது அதையெல்லாம் பொருட் படுத்தாமல் மென்முறுவலுடன் தன் போக்கு போலப் போய்க்கொண்டிருப்பான்.
கர்ம சந்நியாசம், நிஷ்காம கர்மயோகம் ஆகிய இரண்டு மார்க்கங்களுமே சிறந்தவை என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்திய கிருஷ்ணன், இவற்றில் இரண்டாவது மார்க்கமே மேலானது என்றும் போதித்தார். இதனை பலவாறாக விளக்கிச் சொன்னார். இப்போதோ இரண்டும் வேறுவேறானவை, வேறுவேறான பலன்களை அளிக்கக் கூடியவை என்று அஞ்ஞானிகள் சொல்வார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
அவருக்குத் தெரியும், தான் எந்த மார்க்கத்தை போதிக்கிறோமோ, அதை மட்டுமே கேட்டுக் கொள்பவன் அந்த மார்க்கத்தைதான் பின்பற்றுவான், ஆனால் ஏற்கெனவே பல மார்க்கங்களை, பலர் சொல்லக் கேட்டவன், தான் சொல்லக்கூடிய மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து எது சிறந்தது என்று யோசித்துக் குழம்புவான். ஆனால், துரதிருஷ்டவசமாக. அவன் எல்லா மார்க்கங்களும் ஒரு இலக்கையே எட்டுகின்றன என்பதை உணராதவனாக இருப்பான்.
சமய ஆன்றோர்கள் பலர் பலவகைகளில் தத்தமது கொள்கைகளை மக்களிடம் சொல்கிறார்கள். சொல்லப் படும் விதம் வித்தியாசப்பட்டாலும் மையக் கருத்து ஒன்றுதான். புத்தர், மகாவீரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பட்டினத்தார், விவேகானந்தர், வள்ளலார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று எல்லோருமே ஒரே இலக்கைத்தான் சுட்டிக் காட்டு கிறார்கள். ஆனால் அவர்கள் பயணிக்கச் சொல்லும் பாதைகள் வேறுவேறுதான்.
ராமாயண உபந்யாசம் கேட்கிறோம். பல ஆன்றோர்கள் அந்த சொற்பொழிவை ஆற்றுகிறார்கள், பலவிதங்களில் தம் கருத்துகளைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடையை வர்ணனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது சுவையாகவே இருக்கிறது. தாம் எப்படி ராமாயணத்தைப் புரிந்து கொண்டோமோ அதே பாணியில் அவர்கள் அதைச் சொல்லும்போது, கேட்பவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள்.
இதே ராமாயணத்தை இன்னொருவர் சொற்பொழிவாற்றும்போது இவருடைய கற்பனைவளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவருடைய நயம் மாறுபட்டிருக்கிறது. வியாக்யானம் வித்தியாசமாக இருக்கிறது. வேறொருவர் தன்னையே அந்தந்த கதாபாத்திரமாக பாவித்துக்கொண்டு, நாடக பாணியில் ராமாயணம் சொல்லும்போது சுவை கூடுகிறது, பார்வையாளர்களின் ரசனை புத்துணர்வு பெறுகிறது. ஆனால், எல்லோரும் ராமாயணம்தான் சொல்கிறார்கள். அதே ராமன்தான், அதே சீதைதான், அதே ராவணன்தான், அயோத்தி, தசரதன், கைகேயி, பரதன், அனுமன் எல்லாமும் அவரவர்களேதான். ஆனாலும் இதே கதாபாத்திரங்கள் ஒவ்வொருவர் வாயிலாகவும் அவருடைய சொற்பொழிவாக வெளிப்படும்போது ஏதோ புதுப்புதுக்கதாபாத்திரங்களை சந்திப்பது போலவே பார்வையாளர்கள் உணர்கிறார்கள்.
இதெல்லாம்தான் மாயை என்கிறார் கிருஷ்ணன். இந்த மாயைகளை விலக்கிப் பார்த்தால், ராவண சம்ஹாரம் என்ற பேருண்மை விளங்கும். இப்படி விளங்கிக் கொள்பவர்களே ஞானிகள். குழப்பமும், வன்மமும் எங்கே ஆரம்பிக்கிறது என்றால், எந்தப் பாதை சரி என்று சிந்திக்கும்போதுதான். இலக்கு ஒன்றுதான் என்று புரிந்து கொண்டுவிட்டால், எந்தப் பாதையாக இருந்தால்தான் என்ன? இதையே ஒரு விவாதத்திலும் பார்க்கலாம். எந்த விவாதத்திலும் யார் சரி என்ற முக்கியத்துவம் தரப்படுமானால் அங்கே கோபம், வன்மம், வன்முறை, பழிவாங்கல் என்றெல்லாம் துர்குணங்கள் தலைதூக்கும். ஆனால், அதுவே எது சரி என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுமானால் வாதிடும் இருவருமே மன நிம்மதி கொள்ள முடியும்.
பெரும்பாலான கருத்து வேற்றுமைகளுக்கும் இதுதானே காரணம்? அடுத்தவர் கருத்தைப்பற்றிக் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கக் கூடாது, அவருடைய வழியே சென்று அந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனால், அவர் தன் வழிக்கு வரவேண்டும், தான் சொல்வதைத்தான் ஏற்க வேண்டும். தானே (கவனியுங்கள், தான் சொல்வதே அல்ல) சரி என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே? அதாவது, தான், தனது என்ற அகங்காரம், புரிதலுக்கு இடம் கொடுக்க மறுக்கிறது. குறைந்த பட்சம், ‘நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்’ என்று சொல்லி விவாதத்திலிருந்து விலகிக்கொள்ளும் பெருந்தன்மையும் மனசிலிருந்து மறைந்து போய்விடுகிறது!
ஆனால், ஒரு தலைவனுக்கு, ஹீரோவுக்கு உரிய குணம், ‘இதுதான் சரி’ என்று வலியுறுத்துவது. தான் தலைவனாக இருப்பதனாலேயே இந்தத் தன் கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுவிடும் என்பது உண்மையே ஆனாலும், ‘இது என் கருத்து, உனக்கு எது பின்பற்ற எளிமையானதாகப் படுகிறதோ, அதை எடுத்துக் கொள்’ என்று அவன் சொல்வானானேயானால், அவன் தலைவனாக நீடிக்க முடியாது. அதேசமயம், தன் கருத்தை மேன்மையடைய வைக்கும் அறிவு ரையை வழங்குபவர்களின் ஆலோசனையையும் அவன் புறந்தள்ளாமல் கேட்டு, அங்கீகரிக்கவும் செய்வானானால் அவன் அந்தத் தலைமைப் பதவிக்குத் தகுந்தவனாவான்.
அதாவது ஞானியாவான்!
பக்குவமடையாத அர்ஜுனனின் மனம் வெவ்வேறு தளங்களில் பரிதவிக்கும்போது அதைப் பிடித்திழுத்து நிலைநிறுத்த முயற்சிக்கிறார் கிருஷ்ணன். எந்தக் கர்மமும் இயற்றாமல் ஒரு சந்நியாசியாக அதைத் துறப்பது நல்லது என்று ஒரு சமயமும், கர்மம் இயற்றினாலும் அதன் விளைவில் பற்று வைப்பது நல்லது என்று ஒரு சமயமும் கிருஷ்ணன் சொல்லி, அர்ஜுனனுடைய மனதைப் பரிசீலிக்கிறார். இப்போது இரண்டும் வெவ்வேறு மார்க்கமானாலும், இலக்கை அடைவதாகிய நோக்கத்தில் ஒரே சிறப்புடையன என்று சொல்கிறார்.
அர்ஜுனன் எந்த மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம் அடைய வேண்டிய அவசியமே இல்லை, இந்தப் போர்க்களத்தில். கர்மமே இயற்றாமல் சந்நியாசியாக அவனால் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்விட முடியாது. கட்டாயம் போரிடுதலாகிய கர்மத்தை அவன் இயற்றத்தான் வேண்டும். ஆனால், அதே சமயம், அவன் இதனை நிஷ்காம கர்மயோகமாக மேற்கொள்ள வேண்டும். அதாவது விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் கர்மம் இயற்றவேண்டும்.
எந்த ஒரு உரையாடலும், வாய் மூலமான கருத்துப் பரிமாற்றமும், பேசும் இருவருடைய மனங்களும் ஒன்றிணையும்போதுதான் வெற்றியடைகிறது. ஒரு மனம், தான் கேட்பதை ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்று யோசிக்கும்போது, அடுத்த மனம், தன் போக்கிற்கு, முந்தைய மனதை நோகடிக்காமல் இழுக்க வேண்டியிருக்கிறது. இதைத்தான் கிருஷ்ணன் செய்கிறார். தான் பேசும்போதே அர்ஜுனனின் முகபாவத்தை கவனிக்கிறார்.
அதில் தோன்றும் மாற்றங்களுக்கு ஏற்பத் தன் கருத்தைச் சொல்கிறார். அதாவது அவன், தன் கருத்தை, விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதற்கு அவனுக்குள் ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தேக வலையைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கித்தானே அதனுள் சிறைப்பட்டிருக்கும் அவனை மீட்கவேண்டும்?
வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒருவருக்குக் கருத்து வேற்றுமையால் கோபம் ஏற்படுகிறது. உடனே மிகவும் கத்தலாகப் பேச ஆரம்பிக்கிறார். இத்தனைக்கும் அவர்கள் இருவருக்குமான இடைவெளி ஓரிரு அடிகள்தான். ஏன் கத்த வேண்டும், இவர்? பக்கத்திலேயே இருப்பவர்தானே, மெதுவாகச் சொல்லக்கூடாதா? இப்படி டெஸிபலை உயர்த்தியது இவரல்ல, இவருடைய கோபம்! மென்மையாகக் கருத்தைத் தெரிவிக்க முடியுமானால் கத்த வேண்டிய அவசியம் இல்லையே! முடியாது. காரணம், கோபம். பேச்சு வார்த்தையையும் மீறி, இதமான கருத்துப் பரிமாற்றத்தையும் மீறி எழுகிற தான், தனது என்ற அகங்காரம்.
ஒரு காதல் உணர்வாகக் கிசுகிசுக்கப்பட வேண்டியதல்லவா, மென்மையான கருத்துப் பரிமாற்றம்! இந்தக் காதல் இல்லாததால்தான், அன்பு பாராட்டப் படாததால்தான், மௌனம், சத்தமாகிறது! அதனால் இருவருக்கிடையேயும் சமமான, ஒருமித்த காதலையும் அன்பையும் முதலில் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் மீது காதல் இல்லாமல் இல்லை, ஏன் ஒரு குருவுக்குக் காட்டவேண்டிய மரியாதையும் உண்டுதான்.
ஆனால், அதையும் மீறிய, ஏற்கெனவே உருவகித்துக் கொண்ட விலகல் உணர்வு, அப்படி, தான் பெரிதும் மதிக்கும் கிருஷ்ணனிடம்கூட ஒன்றவிடாமல் செய்கிறது, அவன் கருத்தை முழுமனதுடன் ஏற்கவிடாமல் செய்கிறது!ஆனாலும், தான் நிர்ணயித்த இலக்கை, அர்ஜுனன் அடைய வேண்டும் என்பதில் கிருஷ்ணன் பெரிதும் முனைப்பாக இருந்ததால், மேலும், மேலும் அவனுடனான தன் உரையாடலை நீட்டிக் கொண்டே போனார்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்