திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் விவசாயத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் படிப்பு சார்ந்த வேலையை செய்திருக்கிறார். இதற்கிடையே விவசாயம் செய்யவேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானதால் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தற்போது முழுநேர விவசாயியாக மாறி இருக்கிறார். இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு காத்திருக்கிற விவசாய நிலத்தில் ராஜேஷைச் சந்தித்தோம். எங்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற ராஜேஷ், அவரது விவசாய நிலத்தை சுற்றிக் காண்பித்தபடி பேச ஆரம்பித்தார். “இதே இடத்தில்தான் தாத்தா, அப்பா, நான் என மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். நான் கடந்த 10 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். பெரும்பாலும் நெல் விவசாயம்தான். அதைத்தொடர்ந்து காய்கறி பயிர்களும் செய்து வருகிறோம். விவசாயம் செய்வதற்கென்று 5 ஏக்கர் இருக்கிறது. தற்போது அதில் 4 ஏக்கரில் நெல்லும் 1 ஏக்கரில் காய்கறிகளும் போட்டிருக்கிறேன். நெல்லைப் பொறுத்தவரை சன்னரக அரிசியான அங்கூர் 606 சாகுபடி செய்திருக்கிறேன். இந்த ரகம் கடந்த மூன்று வருடங்களாகத்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
புது ரகம் நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நெல்லை விதைத்தோம். சன்ன ரகம் என்பதால் விலையும் விளைச்சலும் சிறப்பாகவே இருக்கும். நான் இந்த நெல்லை மேட்டுப்பாத்தி முறையில் விதைத்தேன். நாற்று விடுகிற நாளில் இருந்து அறுவடை வரை 120 நாள் பிடிக்கும். 10 கிலோ விதை நெல்லை இரண்டு ஏக்கர் அளவில் விதைத்தேன். நான் எப்போதும் அதிக இடைவெளி விட்டுத்தான் நாற்று நடுவேன். இந்த ரக நெல்லையும் கூட அப்படித்தான் நட்டேன். பயிரை வாடவிடாத அளவுக்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் களையெடுக்க வேண்டும். இதை முறையாக செய்தாலே பயிர் நன்றாக வளரும். முன்பே சொன்னது போல் புதுரகம் என்பதால் நோய்த் தாக்குதல் இதுவரை வந்ததில்லை. உயிர் ஊக்கத்திற்காக மட்டும் காம்ப்ளக்ஸ் கொடுக்கிறேன். நமது நிலத்தில் நெற்பயிர்கள் நன்றாக வளரும். அதனால், நெல்லைப் பொறுத்தவரை விளைச்சலில் பெரிதாக ஏமாற்றம்
இருக்காது. கடந்த வருடமும் இதே ரக நெல்லைத்தான் நட்டேன். ஒரு ஏக்கருக்கு சரியாக 35 மூட்டை மகசூல் கிடைத்தது.
அதாவது, 78 கிலோ மூட்டை வீதம் 35 மூட்டை கிடைத்தது. அப்படிப் பார்த்தால், ஏக்கருக்கு 2700 கிலோ கிடைத்தது. ஒரு மூட்டை நெல்லை கடந்த வருடம் ரூ.1600க்கு விற்பனை செய்தேன். 35 மூட்டையை ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை செய்தேன். ஏக்கருக்கு ரூ.56 ஆயிரம் என்றால் 4 ஏக்கருக்கு 2 லட்சத்திற்கு மேல் வருமானம் பார்த்தேன். ஏக்கருக்கு செலவு எனப் பார்த்தால் விதைநெல், நடவுகூலி, உரச்செலவு, அறுவடைச் செலவு என ரூ.20000 வரை செலவு வருகிறது. செலவெல்லாம் போக எப்படிப் பார்த்தாலும் ரூ.30 ஆயிரத்திற்கு லாபம் இருக்கும். இந்த வருடமும் நல்ல விலை இருப்பதால் நெல்லில் நல்ல வருமானம் பார்க்கலாம். விவசாயத்தில் என்னென்ன சாத்தியங்கள் இருக்கிறதோ அதை அனைத்தையும் செய்துவருகிறேன். இதுபோக மாடுகளுக்கு சொந்தமாக பசுந்தீவனமும் வளர்த்துவருகிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ராஜேஷ்-97890 39565
*நெல் சாகுபடி போக ஒரு ஏக்கரில் கத்தரி, வெண்டை, பச்சை மிளகாயும் பயிரிட்டிருக்கிறேன் எனும் ராஜேஷ், நெல்லில் அறுவடையின்போதுதான் வருமானம் பார்க்கமுடியும். காய்கறியில் தினசரி வருமானம் என்பதால் மற்ற செலவுகளையும் பார்க்க முடிகிறது. நெல் வயலுக்கு தேவையான செலவைக்கூட இந்த தினசரி வருமானத்தில் இருந்துதான் எடுக்கிறேன். விவசாயிகள் இவ்வாறு காய்கறிகள் பயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம் என்கிறார்.
*விவசாயத்திற்கு கால்நடை வளர்ப்பு அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் ராஜேஷ், 4 மாடுகளை வளர்த்து வருகிறார். சராசரியாக ஒரு நாளைக்கு 10 லிட்டர் வரை பால் கறந்து லிட்டர்ரூ.35 என விற்றுவிடுகிறார். விவசாயத்தில் இந்த மாதிரியான கால்நடை வளர்ப்பும் கூட நமது அன்றாட பணத்தேவைகளைப் போக்கும் என டிப்ஸ் தருகிறார்.
*சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்துறை சார்பில் பல விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். விதைநெல், விவசாயக் கருவிகள், உரங்கள், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் என அனைத்துமே இந்தத் துறையின் மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ராஜேஷூம் பயன் அடைந்து வருகிறார்.